
சென்னை: “தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டில் கடுகளவும் மாற்றம் இல்லை. ஆனால் தவெக அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ளவில்லை” என கூட்டணி நிலைப்பாடு குறித்து இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வென்ற தவெக தனிப் பெரும்பான்மைக்குத் தேவையான 118 தொகுதிகள் இல்லாததால் மற்ற கட்சிகளின் ஆதரவை நாடியது. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசு ஆட்சி அமைத்தது. இதையடுத்து, தோழமைக் கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் தவெக சார்பில் நடத்தப்படுகிறது. முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க விசிக, ஐயூஎம்எல், மதிமுக, இடதுசாரிகள் ஆகிய கட்சிகளுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளன. தவெக தோழமைக் கட்சி தேநீர் விருந்து கூட்டத்தில் CPI, CPM பங்கேற்காது என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூட்டாக பேட்டி அளித்துள்ளனர்.


